பறவைக்காய்ச்சல் எதிரொலி: கேரளாவிலிருந்து கோழி ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை- கோவையில் தீவிர கண்காணிப்பு ..!!

கேரள மாநிலம், ஆலப்புழாவில் வாத்து பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கோவை – கேரள எல்லைப் பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக கேரளாவில் இருந்து வரும் கோழிக் குஞ்சுகள், வாத்து, கோழி இறைச்சி, முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகிறது. கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறையும் வரை மேற்கண்ட வாகனங்களுக்கான தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 1,126 கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. மாதம்தோறும் 200 மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை நோய்த் தொற்று பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை.

தவிர கோவை மாவட்டத்தில் உள்ள பண்ணையாளா்கள் கோழிகள் வளா்ப்பு, பண்ணை பராமரிப்பு, கழிவுகள் அழிப்பு என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றனா். பண்ணைகளை முறையாக பராமரிப்பதால் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இடம்பெயர்வு பறவைகளின் மூலம் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் கோழிகள் திடீா் இறப்பு, கண் மற்றும் மூக்கில் நீா் வடிதல், காலில் ரத்தக் கசிவு, கொண்டைப் பகுதி நீலம் பூத்திருத்தல் போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் சிகிச்சைப் பெற பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால் கோவையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. கோழி இறைச்சி, முட்டை, வாத்து மற்றும் கோழிக் குஞ்சுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கோழிக்குஞ்சுகள் ஏற்றி வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பறவை காய்ச்சல் மனிதா்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சுகாதாரத் துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு இவர் தெரிவித்தார்.