டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு… அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்…கிளம்பிய புது சர்ச்சை..!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியான நிலையில், அடுத்த திருப்பமாக தென்காசி தேர்வு மையத்தில் மயிலாடுதுறை மாணவர்கள் பலர் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. தென்காசியில் தேர்வான பலரும் வெளிமாவட்டத்தினர் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் எனில், பொதுவாக டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்தே போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் . எனவே கருவூலதுறை அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே லீக் செய்ததாக புகாரும் எழுந்துள்ளது.

குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக தேர்வர்கள் முன்வைத்துள்ளனர். அவற்றை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 6 வகையான குரூப்-4 பதவிகளில் வரும் 10 ஆயிரத்து 117 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 24 ம் தேதி நடந்தது. இந்த குரூப் 4 தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதி இருந்தார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு 8 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 24ம் தேதி வெளியிட்டது.

தேர்வர்கள் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு என்பதையும்,ஒட்டு மொத்த தரவரிசையில் எந்த இடம் என்பதையும் சமூகப் பிரிவு தரவரிசையில் எந்த இடம் என்பதையும் விரிவாக டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் குரூப்-4 பதவிகளில் வரும் தட்டச்சர் பிரிவில் காலியாக இருக்கும் 4 500 இடங்களுக்கு தேர்வர்கள் எழுதியிருந்ததில், ‘அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தரவரிசையில் பின்தங்கியிருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு தேர்வர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இது ஒருபுறம் எனில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தட்டச்சர் பிரிவில் ஒரு ‘லோயர்’ ஒரு ‘ஹையர்’ வைத்திருந்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இரண்டுமே ‘ஹையர்’ வைத்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களைவிட தரவரிசையில் பின்தங்கிதான் இருப்பார்கள். இதுதான் தட்டச்சர் மதிப்பெண் முன்னுரிமை ஆகும்.

குரூப்-4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே இதில் எந்தவிதமான தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக்கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்து இருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.

இதனிடையே நில அளவையர், வரைவாளர் பதவிகளில் உள்ள 1,089 காலி இடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வெளியிடப்பட்டது. ஆயிரம் நில அளவையர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களுக்கு, காரைக்குடியில் இருந்து மட்டும் 700 பேர் தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறிப்பிட்ட ஒரே மையத்திலிருந்து தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்தது. 2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றதுபோல், மிகப்பெரிய முறைகேடு காரைக்குடியில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட வேண்டும் எனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காரைக்குடியைச் சேர்ந்த பயிற்சி மைய நிறுவனர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுபற்றி கூறும் போது, “எங்கள் பயிற்சி மையத்தில் 40க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பணிபுரிகிறார்கள் பி.இ சிவில் மாணவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.இ மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். பி.இ சிவில் மட்டுமன்றி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எங்கள் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகிறார்கள்.

ஒவ்வொரு அரசு தேர்விலும் மொத்த பணியிடங்களில் 60 முதல் 65 சதவீதம் மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் தேர்வாகின்றனர். ஒரு முறை மட்டுமே கட்டணம் வாங்குகிறோம். ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு சீனியர் என்ற ஒரு அடையாள அட்டை கொடுத்தால் அவர்கள் தொடர்ந்து நாங்கள் நடத்தும் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கிறோம். பெரும்பாலும் கிராமபுறத்தை சேர்ந்த ஏழை மாணவர்களே இங்கு பயில்கிறார்கள்” என்றார்.

இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியான நிலையில், அடுத்த திருப்பாக தென்காசி தேர்வு மையத்தில் மயிலாடுதுறை மாணவர்கள் பலர் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. தென்காசியில் தேர்வான பலரும் வெளிமாவட்டத்தினர் என்றும் கூறப்படுகிறது.