திடீரென வெடித்து சிதறிய “டைட்டன் நீர்மூழ்கி கப்பல்”… காரணம் என்ன..?

வாஷிங்டன்: கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண்பதற்காக 5 கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளுடன் டைட்டன் என்ற நீர் மூழ்கி கப்பல் புறப்பட்டது.

புறப்பட்ட சில மணி நேரத்தில் தொடர்பை இழந்த இந்த நீர் மூழ்கி வெடித்து சிதறியது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.

கடந்த 1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் சிக்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் அமெரிக்காவின் நியூ ஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்ததை 1985 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இதைஅடுத்து, இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அவ்வப்போது ஆழ்கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தனர்.

இந்த உடைந்த டைட்டானிக் கப்பலை சுற்றுலாப்பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்க்கும் வகையிலான வசதியை ‘தி ஓசன் கேட்’ என்ற நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தின் ‘டைட்டன்’ என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் 5 பேருடன் பயணத்தை தொடங்கியது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணிநேரத்தில் தொடர்பை இழந்தது.

அவசர காலத்தில் தப்பிப்பதற்காக 96 மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் அந்த நீர்மூழ்கி கலத்தில் இருந்தது. இதனால், முழு வீச்சில் தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீர் மூழ்கி கப்பலின் அழுத்த அறை வெடித்து சிதறியுள்ளது. நீர் மூழ்கி கப்பலின் சேதம் அடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால், கப்பலில் பயணம் செய்த 5 பேரும் பலியாகியுள்ளனர். கப்பல் விபத்துக்கு திடீர் வெடிப்பே “catastrophic implosion” காரணம் என்று நம்பபப்டுகிறது. இந்த திடீர் விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கடலின் தரைப்பகுதியில் இருந்து வந்த கடுமையான நீர் அழுத்தம் மற்றும் உந்துதல் ஆகியவையே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.