திருப்பூர், விழுப்புரத்தில் டைடல் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.!!

சென்னை: தொழில்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.77 கோடியில் அமையவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை தரமணி டைடல் பார்க்கில் ரூ.212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஸ்ரீபெரும்புதூர், ஒசூரில் ரூ.33.46 கோடியிலான 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களையும் திறந்து வைத்தார்.

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை உள்ளடக்கிய இந்த திராவிட மாடல் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது எனப் பேசினார்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “மேம்பட்ட உற்பத்தி மையம் தொடர்பான மாநாடாக இது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக நாம் எட்டுவோம்! தற்போதுள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். அவற்றை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக உருவாக்க வேண்டும். அதன் மூலமாக மின்னணுமயமாக்கப்பட்ட உற்பத்தியை செயல்படுத்த வேண்டும். இதனால் உற்பத்தி பலமடங்கு உயரும். 295 பில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

இவற்றோடு நாம் மனநிறைவு அடைந்துவிடாமல் 2030-ஆம் ஆண்டில், நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதைகளை அடையாளம் கண்டு, அப்பாதையில் நமது அரசு வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டம்தான் அது என்னுடைய கனவுத் திட்டம் என்று கூட சொல்ல மாட்டேன், நம்முடைய கனவுத் திட்டமாக விளங்கக்கூடிய “நான் முதல்வன் திட்டம்”. நமது இளைஞர்களின் வேலைபெறும் திறனை அதிகரிக்கச் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட திட்டம் தான் இந்தத் திட்டம்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், உலகளாவிய பங்களிப்புடன் “அறிவுசார் நகரம்”ஒன்று உருவாக்கப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை (Research Parks) நிறுவ ஊக்குவிக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படியே, அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்று அண்மையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோருடனான சந்திப்பில் நான் அதை அறிவித்தேன். இவையெல்லாம், அறிவுசார் மனித வளத்தை உருவாக்கி, மேம்பட்ட உற்பத்தி மற்றும் புத்தாக்கங்களை உருவாக்கி, ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள்.

மேம்பட்ட உற்பத்தி தொடர்பாக உலகப் பொருளாதார மன்றமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். உலக அளவிலான நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கான திட்டக்கூறுகளை வழிநடத்துவது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வெற்றிப் பாதையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இது ஏதுவாக அமைகிறது. சூரிய எரிசக்தி, மின்னணுவியல், மின்வாகனங்கள், வான்வெளி & பாதுகாப்பு, தொழில்நுட்ப ஜவுளிகள், கூட்டு உற்பத்தி (Additive manufacturing) முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் (3D Design & Printing), ரோபோடிக்ஸ் (Robotics) ஆகியவை புதிய தொழில் வாய்ப்பு உள்ள துறைகளாக அறியப்பட்டிருக்கிறது. இந்தத் துறைகளின் உற்பத்தியில் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும், தொழில்முறை 4.0 தரத்தையும் அறிமுகப்படுத்தி, தமிழகத் தொழில்துறைச் சூழலை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்துவது நமது தொழில் சூழலை மேலும் செம்மைப்படுத்த வழிவகுக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.

மேம்பட்ட உற்பத்தியைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு பலபுதிய முயற்சிகளை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்திட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கென மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அளித்திட அரசு முனைந்திருக்கிறது. திறன்மிகு மையங்களை அமைக்கக்கூடிய முயற்சியில், முதலாவதாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, சென்னை டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM) இங்கு என்னால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி (Hub and Spoke model) அடிப்படையில் இயங்கும் TANCAM, மாநிலமெங்கும் இருக்கின்ற கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன்பயிற்சி, புதிய பொருட்கள் உருவாக்குதல் (Product Development), நவீன உத்திகள் ஆகியவை பெருக வழிவகுக்கும். மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களின் படிப்புக்கும், பணிக்கும், இடையூறு எதுவுமில்லாமல், மெய்நிகர் சூழல் வழியாக பயிற்சி அளிக்கப்படும். புதிய பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கும், சிறந்த பயிற்சிகளுக்கும், சூழலமைப்பு (eco system) அமைத்துக் கொடுக்கப்படும். தொழில்துறையினருக்கு ஒரு சாதகமான களம் உருவாக்கித் தரப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நவீன உத்திகளுக்கும், புதுப்புது திட்டப்பணிகளுக்கும் வழிவகை செய்து தரப்படும்.இதன்மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில் மாநிலமாக வளர்ச்சி அடைவது உறுதி செய்யப்படும்.

டிட்கோ நிறுவனம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘சீமென்ஸ்’ உடன் இணைந்து, தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட & மேம்பட்ட உற்பத்தி மையம் (TANSAM) மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (TAMCOE) அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, விரைவில் துவக்கிவைக்கப்பட இருக்கிறது. இரண்டாவதாக, திருபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 தொழில் புத்தாக்க மையங்கள், (Industrial Innovation Centres) இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள், தொழில்துறை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொடக்கநிலை தொழில்முனைவோர் விரைவில் வளர்ந்திடவும், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், உற்பத்தித் துறையின் உற்பத்தி மற்றும் போட்டித் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மையங்களாக விளங்கும். ஒவ்வொரு மையமும் 23,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுமையான யோசனைகள், 200-க்கும் மேற்பட்ட முன்மாதிரிகளை மதிப்பீடு செய்யவும், 30-க்கும் மேற்பட்ட தொடக்க காலப் பட்டப்படிப்பு நிலையில் உள்ளவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த மையங்களை இயக்குவதற்காக ஃபோர்ஜ் (Forge) எனப்படும் கோயம்புத்தூர் இன்னோவேஷன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டருடன் (Coimbatore Innovation and Business Incubator) சிப்காட் இணைந்து செயல்பட இருக்கிறது. மூன்றாவதாக, தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் “மினி டைடல் பூங்காக்கள்” (Neo Tidel Parks) அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதனடிப்படையில் திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு இன்று என்னால் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பூங்காக்கள் செயல்படத் துவங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

நான்காவதாக, வழிகாட்டி நிறுவனமும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பு (Industry 4.0 Maturity Survey) இன்றைய நாள் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தொழில்துறை மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற துறைகளும், மேம்பட்ட உற்பத்தித் தொழில்களை மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி வருகின்றது. 2877 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் இவை அமைக்கப்பட இருக்கிறது.

இதன்மூலம், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியினால் ஏற்படவுள்ள தொடர் மாற்றங்களை, நமது தொழிலாளர்கள் சுலபமாகக் கையாள முடியும். இதனைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை (DITDS), தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துடன் இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்திடவும், புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்திடவும், அத்துறையினரின் பிரச்சனைகள் மற்றும் சவால்களைத் தீர்த்து வைக்கக்கூடிய வகையில், “வளர் 4.0″என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் நம்மிடம் இருக்கிறது. அதற்கான பணியாளர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு திறன்மிகு மையங்களும், புத்தாக்க மையங்களும் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்குத் தயார்நிலைப்படுத்திக் கொள்வதற்கான நம்முடைய அரசின் முயற்சிகளில் நீங்களும் பங்கேற்று, ஒத்துழைக்க வேண்டுமென்று என்று நான் எல்லோரையும் அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வளர்ச்சிதான் நம் மாநிலத்தின் வளர்ச்சி! நம் மாநிலத்தின் வளர்ச்சிதான் நம் நாட்டின் வளர்ச்சி! உலக அரங்கில் தமிழ்நாட்டினை நோக்கி கவனம் ஈர்க்கக்கூடிய முயற்சிகளை நிச்சயமாக இவை அனைத்தும் அமைய வேண்டும்”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.