இனி சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை.. தேவஸ்தானம் மகிழ்ச்சி அறிவிப்பு..!!

கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும்.

இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர். ஐயப்ப சுவாமியை காண மண்டல கால பூஜை நேரமான கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வாடிக்கை.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், ‘கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரள அரசால் தொடங்கப்பட்டது. அதனை கேரள போலீசார் நிர்வகித்து வந்தனர். இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின் போது, தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியது. அதை தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை’ என்று கூறினார்.