ஆன்லைனைப் போல ரயில்வே கவுன்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்களுக்கும் விருப்ப பயண காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கான டிக்கெட் பணத்தை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். ரயில்களுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு விருப்ப பயண காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு பயணிகளின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது. காப்பீட்டின் மூலம் விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். இதற்காக ஒரு டிக்கெட்டுக்கு தலா 45 பைசா காப்பீடு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த வசதியை ரயில்வே கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரயில்வே கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் விருப்ப காப்பீடு வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், காப்பீடு பெற விரும்புவோர், டிக்கெட் கட்டணம் மற்றும் காப்பீடு கட்டணத்தை கட்டாயம் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டுமென ரயில்வே வாரியம் நேற்று தெரிவித்துள்ளது. தற்போது 5, 10, 20, 25 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால் டிக்கெட் கட்டணத்தை அதற்கான பிரீமியம் தொகையுடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டிக்கெட் ரத்து செய்யப்படும் பட்சத்தில், இதர ரத்து கட்டணங்களுடன் சேர்த்து, 45 பைசா காப்பீட்டு பிரீமியத்திலிருந்து 9 பைசா பிடித்தம் செய்யப்படும்.







