ஏதோ ஆபத்து இருக்கு.. கோவை கார் வெடிப்பு சம்பவம் : கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை..!

சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் ஏதோ ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்தார்.

கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு கார் சென்றது. திடீரென்று அந்த கார் வெடித்து சிதறியது.

இதில் கோவிலின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் காருக்குள் இருந்த நபர் இறந்தார். முதலில் இது சாதாரண விபத்தாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இருப்பினும் இதில் சில மர்மங்கள் இருந்தன. இதையடுத்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. முதற்கட்டமாக இறந்த நபர் யார்? அவர் பயன்டுத்திய கார் பற்றிய விபரங்களை போலீசார் விசாரிக்க துவங்கினர். இந்த விசாரணையின்போது காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரிலேயே இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது தான் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் மூட்டைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இதனால் தான் சதிச்செயல் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து வீடியோவில் இருக்கும் நபர்கள் பற்றி விசாரணை நடத்திய போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன்படி ஜமேசா முபீனுடன் இருந்த உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் இது வெறும் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இல்லை. இதில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம். இதனால் விசாரணையை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். அதோடு இதனை குண்டு வெடிப்பு சம்பவம் என்று சொல்லாமல் சிலிண்டர் வெடிப்பு என போலீசார் கூறுகிறது. இதன்மூலம் உண்மையை மறைக்க முயற்சி செய்கிறதா? என கேள்விகள் கேட்டு அண்ணாமலை சீறினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இதுபற்றி கருத்துகளை தெரிவிக்காமல் இருந்து வருவதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நேற்று 5 பேர் மீதும் உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு கோவை வந்த என்ஐஏ அதிகாரிகள் சில முக்கிய விஷயங்களை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் கோவை கார் வெடிப்பு குறித்து இன்று கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு நல்லகண்ணு, ”கோவை கார் வெடிப்பு சம்பவம் ஏதோ ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுதுது கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனால் விரைவில் இதுதொடர்பான என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.