தமிழகத்தில் யாருக்கும் ஓமிக்ரான் பிஏ4 தொற்று இல்லை… பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

தூத்துக்குடி : தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை எனவும், தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விமானம் முலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் புதிய வகை ஓமிக்கிரான் பிஏ4 வைரஸ் பதிப்பு செங்கல்பட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முறையான சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ளார்.

கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 50க்கு கீழே தான் உள்ளது. தமிழகத்தில் எங்காவது கொரோனா பாதிபு திடீரென எழுச்சியைச் சந்தித்தால் அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணுத் தொகுப்பு ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்யப்பட்டு , பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பற்றி பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக இறப்பு எதுவும் இல்லை. பிஏ நான்குவகை ஓமிக்ரான் தொற்று செங்கல்பட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளோம். மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக 4000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்ட 4442 செவிலியர்கள், 2,247 சுகாதார பணியாளர்கள் என 7696 பேருக்கு தற்போது ஊதியம் உயர்த்தி வழங்கபட்டுள்ளது.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பது குறித்து அலுவலர் அளவிலான ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு குறைப்பது மாநில அரசுகளா என பிற மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளதையும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.