பண்ணாரி அம்மன் திருவிழாவில் குண்டம் இறங்காத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலில் தனி வழி..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 20 பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் சப்பரம் கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து அன்றிரவு பண்ணாரி அம்மன் கோவிலில் நிலக் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினமும் இரவில் அம்மன் புகழ் பாடும் பாடல்களை பாடியபடி கம்ப நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வரும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கோவிலில் ஏப்ரல் நான்காம் தேதி அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை 4 மணி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். தீ குண்டம் இறங்கும் பக்தர்கள் நேராக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்வது வழக்கம். அதே சமயம் குண்டம் இறங்காமல் நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு இந்த ஆண்டு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென கோவிலின் மேற்குப் பகுதியில் இருந்து இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு குண்டம் இறங்காத பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.