புது டெக்னிக்கா இருக்கே!! தெருக்களில் சிகரெட் துண்டுகளை எடுக்கும் க்யுட் காகங்கள்: ஸ்வீடன் ஸ்டார்ட் – அப் நிறுவனம் பயிற்சி..!

ஒருவர் புகைப்பிடித்து விட்டு தனித்தனியாக எரியும் சிகரெட் துண்டுகள் தான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 டிரில்லியன் அளவுக்கு அழிக்க முடியாத மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிகரெட் கழிவுகள் ஈஸியாக மக்கக் கூடிய குப்பை என பலரது தவறான எண்ணமாக இருந்து வருகிறது.

ஆனால், சிகரெட் துண்டுகள் தான் முதன்மையான பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். அதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய நச்சு ரசாயனங்கள் உள்ளன.

இந்த புள்ளி விவரங்களை மனதில் கொண்டு, ஸ்வீனிடனின் சோடெர்டால்ஜி நகரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று, தெருவில் கிடக்கும் சிகரெட் துண்டுகளை சேகரிக்க காகங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

‘என்னாது சிகரெட் துண்டுகளை சேகரிக்க காக்காவா?’ செம காமெடியா இருக்கே என உங்களுக்கு சிரிப்பு வரலாம். ஆனால் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் சிகரெட் துண்டுகளை சேகரிக்க இந்த திட்டம் சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும் என நம்புகிறது.

ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இருந்து வெகு தொலைவில் உள்ள சோடெர்டால்ஜி என்ற நகரில் அமைந்துள்ள கோர்விட் கிளீனிங் என்ற நிறுவனம் காகங்களுக்கு இத்தகைய பயிற்சியை அளித்து வருகிறது. சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, அதற்கு பதிலாக உணவு வழங்கும் ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோர்விட் கிளீனிங்கின் நிறுவனர் கிறிஸ்டியன் குந்தர்-ஹான்சென் கூறுகையில்,

“காகங்கள் ஒவ்வொரு முறை இயந்திரத்தினுள் ஒரு சிகரெட் துண்டுகளை வைக்கும் போதும், அதற்கு பரிசாக உணவு (கடலை) வழங்கப்படும். இந்த முறையானது நகரத்தில் சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்வதற்கான செலவை 75 சதவிகிதம் குறைக்கும்,” என்கிறார்.

ஸ்வீடனில், ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியனுக்கும் அதிகமான சிகரெட் துண்டுகள் தெருக்களில் வீசப்படுகின்றன, மேலும் நாட்டின் குப்பைகளில் 62 சதவீதம் சிகரெட் துண்டுகளால் உருவாவதாக ‘தி கீப் ஸ்வீடன் டைடி’ என்ற அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக சோடெர்டால்ஜி நகர தெருக்களை சுத்தப்படுத்துவதற்காக மட்டும் 20 மில்லியன் க்ரோனா, அதாவது 2 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது.

எத்தனையோ பறவை வகைகள் இருக்கும் போது சிகரெட் துண்டுகளை சேகரிக்க காகங்களை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு கோர்விட் கிளீனிங்கின் நிறுவனர் கிறிஸ்டியன் குந்தர்-ஹான்சென் விளக்கம் அளித்துள்ளார்.

“2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவின் படி, 7 முதல் 10 வயதுள்ள மனிதக் குழந்தைக்கு நிகரான பகுத்தறிவுத் திறனை காகங்களிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குப்பையில் கிடக்கும் சிகரெட்டுகளைத் தேடுவது, குறிப்பிட்ட இடத்திற்கு அவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பது போன்ற சிக்கலான பணிகளை வெற்றிகரமாகக் கையாள அதிக வாய்ப்புகள் காகங்களிடம் உள்ளன,”

முதலில் இந்த பயிற்சியானது ஒரு படிப்படியான செயல்முறையாக இருக்கும், பின்னர், முழுமையாக பயிற்சி பெற்ற சில காகங்கள், ஸ்வீடன் நாட்டின் சோடெர்டால்ஜி நகரில் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் பணியை தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவை என்பதால், அவற்றை பயன்படுத்துவது சரியான தேர்வாக இருக்கும் என முடிவெடுத்தோம். மேலும் காகங்களுக்கு எங்கள் நிறுவனம் கற்பிப்பது மிகவும் எளிதான ஒரு செயல் ஆகும். எனவே சொல்லி கொடுக்காமலேயே காகங்கள் ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், காகங்கள் தவறுதலாக குப்பைகளை உண்ணும் அபாயமும் குறையும்,” என்கிறார்.

காகங்களை துப்புறவு பணியில் ஈடுபடுத்துவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்னதாக 2018ம் ஆண்டு பிரான்சில் உள்ள ‘புய் டு பவ்’ என்ற பூங்காவில் சிகரெட் துண்டுகள் போன்ற சிறிய குப்பைகளை சேகரித்து குப்பை தொட்டியில் போடும் பணிக்காக 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.