ஹிஜாப் சர்ச்சை வழக்கு: நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்கும் கர்நாடகம்..!

பெங்களூர்: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கர்நாடக சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார்.

கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து துவங்கிய இந்த பிரச்னை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் பரவியது.

சிக்கமகளூரு, மண்டியா, சிவமொக்கா, பாகல்கோட்டை உள்பட பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போட்டி போராட்டம் நடத்தினர். சிவமொக்கா, பாகல்கோட்டையில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து 3 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு  கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நேற்று மதியம் 2:30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி நீதிபதி கிருஷ்ணா தீக்சித் உத்தரவிட்டார்.
இதற்கிடையே பெங்களூருவில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் விவகாரத்தில் ஹிஜாப் குறித்த பிரச்சனை இடம்பெறவில்லை. இருப்பினும் அதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஹிஜாப் தடை விவகாரம் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

இதுகுறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி மறைமுகமாக கூறினார். அவர் கூறுகையில், ”மாநிலத்தில் நடக்கும் விவகாரம் (ஹிஜாப்) குறித்து ஆலோசித்தோம். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.

முன்னதாக கர்நாடக போலீஸ் துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார். அப்போது ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பான கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தார். கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பான விசாரணை குறித்து அட்டர்னி ஜெனரல் பிரபுலிங்க் நாவடி எடுத்துரைத்தார்.

இதற்கிடையே பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் பரப்பளவில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.