மேடையிலேயே கொந்தளித்த மகளிரணி நிர்வாகி… கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்த திமுக.!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் மீனா ஜெயக்குமார்.

இவர் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் முன்னிலையில் அவரது மனைவிக்கு எதிராக முரண்பட்ட கருத்துக்களை கூறியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், தி.மு.க. தலைமை அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூடத்தில் மாநில மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். மேயர் கனவுடன் இருந்த இவர் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார். ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் இருந்த மீனா ஜெயக்குமார் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்பு கொட்டி தீர்த்தார். குறிப்பாக, தி.மு.க. கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமாகிய கார்த்திக்தான் தன் வெற்றியை தடுத்தார் என பகிரங்கமாக அனைவர் முன்பும் குற்றம் சாட்டினார். “உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக எனக்கு வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?” என்று கடுமையாக ஒருமையில் பேசினார். இதனால், கூட்டத்தில் இருந்த அமைச்சர் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில்தான், மகளிரணி நிர்வாகி மீனா ஜெயக்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சித்தலைமை அறிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதவிர உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 4 திமுக பொறுப்பாளர்களை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.