சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு.!!

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணைய உள்ளது. 50அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் (100 எம். எல். . டி) தண்ணீர் எடுக்கலாம் .தற்போது கோடை காலம் என்பதாலும் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கோடை மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 13 1/2 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 37 எம். எல். டி. (3 கோடி 70 லட்சம் லிட்டர்)தண்ணீர் வழங்கப்பட்டது. நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் நீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: – சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஓரிரு நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணையில் 13 1/2 அடிக்கு தண்ணீர் இருப்பதால் அந்த தண்ணீரை வைத்து வருகிற ஜூன் மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்யலாம். கோடைகாலம் என்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.