அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணையை நீக்க கோரி ஹைகோர்ட்டில் தமிழக அரசு மனு.!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.

ஆனால் சைபர் கிரைம் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்தது. செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சென்னை எம்.பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான எத்தனை வழக்குகளில் அமலாக்கத் துறை தங்களை இணைத்துக் கொள்வது? என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.