ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி … பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு-நாளை முதல் அமல்..!

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட திட்டமிடுவார்கள். இதனால் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கவும், நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில், அந்தந்த மண்டலங்கள் நடைமேடை கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது..

அந்த வகையில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. நாளை முதல் அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வு, ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஜனவரி 31க்கு பிறகு பழைய கட்டண முறை அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது..