மீண்டும் மசினக்குடிக்கு திரும்பி வந்த அரிசி ராஜா யானை… அடக்க வந்த 7 கும்கி யானைகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் 15 வயதுடைய மக்னா யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. வீட்டை உடைத்து அரிசியை ருசித்து சாப்பிடும் இந்த யானையை அந்த பகுதியினர் அரிசி ராஜா யானை என்று அழைத்து வந்தனர். இந்த யானை அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை மிதித்து கொன்றது. இதனால் இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கடந்த வாரம் வனத்துறையினர் பிடித்தனர்.
பின்னர் அந்த யானை காங்கிரஸ் மட்டம் பகுதியில் விடப்பட்டது. யானையை ரேடியோ காலர் சிக்னல் மூலமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் காட்டில் விடப்பட்ட மசினக்குடி வனப்பகுதிக்கு மீண்டும் திரும்பி இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த யானை மீண்டும் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக 7 கும்கி யானைகள் உதவியுடன் அரிசி ராஜா யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அந்த யானை எக்காரணம் கொண்டும் கூடலூர் பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க வேண்டும் என்றும், அதற்கு எத்தனை பணியாளர்கள், எத்தனை வாகனங்கள் ஆனாலும் உபயோகித்து கொள்ளலாம் என்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.