கோவையில் கொப்பரை தேங்காய் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை…

கோவை மாவட்டம் சூலூரில் 5 ஆயிரத்து 400 எக்டர் பரப்பளவில் சுமார் 10 லட்சத்திற்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு செஞ்சேரி அரசு கொள்முதல் நிலையம் மற்றும் காங்கயம், வெள்ளக்கோவில் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்,தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் சூலூரில் உள்ள விவசாயிகள் புதிதாக தென்னங்கன்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.முன்பு தேங்காய் சராசரியாக காய் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.11 வரை இருந்தது. தற்போது 8 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சராசரியாக ரூ.13-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு காய் ரூ.18-வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல், கொப்பரையும் தற்போது வெளிமார்க்கெட்டில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.85-க்குமட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பு ரூ.100-க்கு மேல் கொள்முதல் விலை இருந்தது. தற்போது,அரசு கொள்முதல் நிலையத்தில் மட்டும் கொப்பரை கொள்முதல் விலை சற்று கூடுதலாக உள்ளது. தொடர்ந்து கொப்பரை மற்றும் தேங்காய் விலை சரிந்து வருகிறது. ஆனால், தென்னை பராமரிப்பு செலவு, உரச்செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விவசாயி ஈஸ்வரன் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக தோட்டங்களில் கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காய்கள் இருப்பு வைக்கப்படுகிறது. தேங்காய் சார்ந்துள்ள தொழில்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர் அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காயிலிருந்து வரும் பருப்பு ஏற்றுமதிக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.