நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று ஊட்டி-கூடலூா் சாலையில் எச்.பி.எப். பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது. அதேபோல ஊட்டி-கோத்தகிரி சாலையில் மைனலா என்ற இடத்தில் 4 மரங்கள் சாலையில் விழுந்தன. இதனை தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினா், வருவாய்த் துறையுடன் இணைந்து அகற்றினா்.இன்று காலை மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குந்தா, கல்லக்கொரை உள்பட பல இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் மரங்கள் விழுந்துள்ளன. இந்த மழைக்கு ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கல்லக்கொரை என்ற பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடலூா் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கூடலூா்-உதகை சாலையில் நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், ஊட்டியில் இருந்து கேரளம் மற்றும் கா்நாடகம் மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா். மேலும், சாலையின் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை சீரமைத்தனா். இதையடுத்து, வாகனங்கள் சென்றன.
Leave a Reply