சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா-கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.!!

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10- ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ஆம் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.வழக்கமான பூஜைகளுக்கு பின் மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதைத்தொடர்ந்து 19-ஆம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

இன்று முதல் 19 தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது,அதன்படி ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் தினசரி 15 ஆயிரம் பேர் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், திருவிழாவையொட்டி சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளதாக கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது.