அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு முகநூலில் கொலை மிரட்டல்- தி.மு.க பிரமுகர் கைது.!!

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியை குவித்துள்ளது. எனினும் இந்த தேர்தல் வெற்றியுடன் சேர்த்து குழப்பத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.

அதாவது, பல இடங்களில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், இதனையொட்டி அமைச்சர் ஒருவருக்கு திமுக பிரமுகரே கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா நேற்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கடலூர் எஸ்.என்.சாவடி டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (51) என்பவர் தனது முகநூலில் அவதூறாக பதிவிட்டு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அவதூராக அவர் பதிவு செய்ததை ஆதாரத்துடன் போலீசார் கைப்பற்றினர். பின்னர் திமுக பிரமுகரான முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். முரளிகிருஷ்ணன் கடலூரில் உள்ள பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என கூறப்படுகிறது.

முரளிகிருஷ்ணன் என்பவர் தனது முகநூல் பதிவில், மாவட்டக் கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலை துண்டிக்கப்படும் எனவும் எம்ஆர்கே அழிவின் ஆட்டம் ஆரம்பம் எனவும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவே அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமானது.