திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியது.
வானம் மேகமின்றி தெளிவாக உள்ள நிலையில், ஒளி வட்டம் வானவில் போல பல வண்ணத்துடன் காட்சி அளித்தது. பொதுமக்கள் இந்த ஒளிவட்டத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். வெளிப்புறம் இளம்பழுப்பு நிறம், உட்புறம் சிவப்பு மற்றும் பிற வண்ணக் கலவையுடன் ரசிக்கும்படி இருந்த இந்த ஒளிவட்டம் 11.25 முதல் 12.40 வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதனை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர்.
இவ்வாறு சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படுவதை, கிராமப்புறங்களில் அகல் வட்டம் என்பார்கள். அகல் வட்டம் பகல்மழை என பழமொழியும் உள்ளது. கோடை காலத்தில் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள் மிக உயரத்தில் செல்லும்போது பட்டக வடிவில் பனிக்கட்டி துகள்களாக மாறும். அதன் மீது படும் சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும்.
இது குறித்து திருப்பூர் அறிவியல் இயக்கத்தினர் கூறுகையில், கோடை காலத்தில் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள் மிக உயரத்தில் செல்லும்போது பட்டக வடிவில் பனிக்கட்டி துகள்களாக மாறும். அதன் மீது படும்சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும் 22 டிகிரி அளவில் ஒளி விலகல் அடையும்போது சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டால் பனிக் கட்டிகள் மழையாக பெய்யும்.
இது வழக்கமான இயற்கை நிகழ்வு. இதைக்கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. மேகங்களின் வெப்பநிலை குறைந்து, அதிலிருக்கும் நீர், சிறு பனித்துகளாக மாறுகிறது. இதில் சூரிய ஒளி விழும்போது, வானவில்லைப் போன்ற வண்ண ஒளிவட்டத்தை ஏற்படுத்துகிறது. சோலார் ஹாலோ எனப்படும் இந்த வளிமண்டல ஒளி நிகழ்வை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை.எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றனர்.
Leave a Reply