சென்னை: விருதுநகரில் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி விலகாவிட்டால் அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், திமுகவின் மூத்த நிர்வாகியாகவும் இருப்பவர் அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது சொந்த மாவட்டமான விருதுநகர் சென்ற இவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். நேற்று அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரமோற்ச விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்தார். அதேபோல் பள்ளிசாரா மற்றும் வயது வந்தவர்களுக்கான கல்வி திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார்.
அதன் பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினவிழா நடைபெற்றது. சுகாதாரத்தூறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ரூ.4.31 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிலையில், விருதுநகர் பாலவனத்தம் கிராமத்தில் தன்னிடம் மனு அளிக்க வந்த ஏழை பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 12 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் தன்னிடம் கை நீட்டி பேசும் பெண்ணின் தலையில், அழைப்பிதழ்களை கொண்டு அமைச்சர் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டு உள்ளார்.
Leave a Reply