தமிழகத்தில் வேர் பிடிக்க தொடங்கியது தாமரை.!!

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், பாஜகவின் தாமரை சின்னம் வேர் பிடித்து வளரத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

போட்டியிடும் இடங்களைப் பகிர்ந்துகொள்வதில் உடன்பாடு எட்டப்படாததால், நட்பு முரணுடன் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்து களம் கண்டது. மாநிலம் முழுவதும் உள்ள 12,828 வார்டுகளில் 43 சதவீத இடங்களில், அதாவது சுமார் 5,000 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக களப் பணியாற்றியது பாஜக.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவின்படி, 22 மாமன்ற உறுப்பினர்கள், 56 நகர்மன்ற உறுப்பினர்கள், 230 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 308 பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இவற்றில் 200 பதவிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாஜகவுக்கு கிடைத்துள்ளன.
2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 222 இடங்களைப் பெற்றிருந்தது. அவற்றில் 50 சதவீதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்துதான் கிடைத்திருந்தது. ஆனால், இந்த முறை கன்னியாகுமரியில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கணிசமான இடங்களை கூடுதலாகப் பெற்றிருப்பதுடன், வாக்கு வங்கியையும் உயர்த்தியுள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, உள்ளாட்சித் தேர்தலில் அதிலும் குறிப்பாக மறைமுகத் தேர்தலில் ஆளும் கட்சியின் கைதான் ஓங்கி இருக்கும். எதிர்க்கட்சிகளால் பெரிய அளவுக்கு சாதிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், 2011 உள்ளாட்சித் தேர்தலில் 4 மாமன்ற உறுப்பினர்கள், 37 நகர்மன்ற உறுப்பினர்கள், 181 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளை வென்றிருந்த பாஜக, இப்போது 22 மாமன்ற உறுப்பினர்கள், 56 நகர்மன்ற உறுப்பினர்கள், 230 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என தனது பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மூன்றாவது பெரிய கட்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தனித்து நின்ற கட்சிகள் அடிப்படையில் பாஜக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதை முழுமையான முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், பாஜக மெல்ல மெல்ல வேர் பிடித்து வளரத் தொடங்கியுள்ளது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவு தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
பாஜகவுக்கு மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, 5.3 சதவீத வாக்கு வங்கியாகும். பாஜக பெற்ற வாக்குகளை ஆய்வு செய்தால், கன்னியாகுமரியில் 2 லட்சம் வாக்குகள், கொங்கு மண்டலத்தில் 2 லட்சம் வாக்குகள், சென்னையில் 2 லட்சம் வாக்குகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3 லட்சம் வாக்குகள் என கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தத் தேர்தலில் கன்னியாகுமரியைத் தாண்டி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சென்னை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்ளிலும் பாஜக கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருப்பதால்தான் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது. இதைத் தவிர, பிற மாவட்டங்களில் ஒற்றை அல்லது இரட்டை இலக்கத்தைப் பெற்று வந்த இடங்களில்கூட பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளதை தேர்தல் முடிவை ஆய்வு செய்தால் தெரியவரும் என்கின்றனர் தேர்தல் புள்ளிவிவர ஆய்வாளர்கள்.

தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும், தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும், கும்பகோணம், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளே புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு தனது வாக்கு வங்கியை பாஜக உயர்த்தியுள்ளது.
வாக்கு வங்கி உயர்வுக்கு என்ன காரணம்?: இந்த அளவுக்கு வாக்கு வங்கி உயர்வதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக செய்து வரும் அரசியல் நகர்வுகள்தான் முக்கியக் காரணம். 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணியின்றி தவித்துக் கொண்டிருந்த பாஜகவுக்கு, அதிமுக கூட்டணி கிடைத்தது. அந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டாலும்கூட, 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்கு வங்கியை எட்டுவதற்கு உந்து சக்தியாக இருந்தது பாஜகதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உத்தர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்து ஒற்றுமையை அடிப்படை மையமாக வைத்து சமூக ரீதியான கட்டமைப்பு செய்து வாக்கு வங்கியை உயர்த்துவதுபோல, தமிழகத்திலும் சத்தமின்றி சமூக ரீதியாக வாக்கு வங்கியை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது பாஜக.
கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் வாக்கு வங்கியைக் குறிவைத்து மாநிலத் தலைவராக எல்.முருகனை நியமித்தது, பின்னர் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது, கொங்கு வேளாளர் மற்றும் பிற சமூகங்களில் இருக்கும் படித்த இளைஞர்களைக் கவரும் வகையில், கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் ஐபிஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்கியது.
தென் மாவட்டங்களில் திராவிடக் கட்சிகளால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு அவர்களது சமூகப் பெயர் மாற்றத்துக்கு உதவியது உள்ளிட்ட வாக்கு வங்கியை உயர்த்த உதவும் பல்வேறு சமூக ரீதியான அசைவுகளை பாஜக செய்துகொண்டே இருக்கிறது.
காலம் காலமாக திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு வாக்களித்து வந்த பிராமணர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பதை உணர்ந்து, அந்தச் சமூக வாக்குகளையும் இந்த முறை பெரும்பான்மையாக கவர்ந்திழுத்திருக்கிறது .
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மாமன்ற, நகர்மன்ற, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.

தேவேந்திரகுல வாக்கு வங்கி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து நாடார்கள் பாஜக தொடங்கப்பட்ட காலம் முதலே அந்தக் கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், இப்போது பிற தென் மாவட்டங்களிலும் ஹிந்து நாடார் வாக்கு வங்கி பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

சிவகாசி மாநகராட்சியில் ஒரு மாமன்ற உறுப்பினர் பதவி, திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, பணகுடி, முக்கூடல், வடக்கு வள்ளியூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கானம், தென்திருப்பேரை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் பாஜக குறிப்பிடத்தக்க பேரூராட்சி உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 9 சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. தேவேந்திரகுல வேளாளர், ஹிந்து நாடார் சமூக வாக்குகள் பங்களிப்பின்றி இந்த அளவுக்கு பாஜகவால் வாக்கு வங்கியைப் பெற முடியாது என்பதே உண்மை.

இதேபோல, தேவேந்திர குல வேளாளர்கள் பாஜகவின் வாக்கு வங்கியாக மாறியிருக்கின்றனர் என்பதற்கான சான்றுகளும் தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், தென்காசி மாவட்டத்தில் சாம்பவர்வடகரை, எஸ்.புதூர், மேலகரம், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகள், , கமுதி பேரூராட்சி ஆகியவற்றில் இந்த முறை பாஜக தடம் பதித்துள்ளது.

கடலூர் மாநகராட்சியில் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட 28-ஆவது வார்டில் அதிமுக, காங்கிரஸ் ஆகியவற்றை வைப்புத்தொகையை இழக்க வைத்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது பாஜக என்பதைப் பார்க்கும்போது, வட தமிழகத்திலும் அந்தக் கட்சி வளருவதற்கான அடித்தளம் உருவாகியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கியுள்ளன.  இதேபோல, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரட்டை இலையைத் தவிர்த்துவிட்டு, தாமரைக்கு இந்த முறை பிராமணர்களும் ஒன்று திரண்டு வாக்களித்துள்ளனர். பிராமணர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை மாநகராட்சியில் 134-ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்த் வெற்றிபெற்றுள்ளதே இதற்கு மிகச்சிறந்த உதாரணம். மேலும், சென்னை மாநகாராட்சியில் தென் சென்னை மக்களவைத் தொகுதி, துறைமுகம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 19 வார்டுகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை மாநகராட்சியில் 8 சதவீத வாக்குகளையும் அந்தக் கட்சி பெற்றுள்ளது. இதேபோல, ஸ்ரீரங்கம் நகராட்சியில் 1, 2-ஆவது வார்டுகளில் 2-ஆவது இடத்தை பாஜக பிடித்துள்ளது.
கொங்கு மண்டலம்: கொங்கு மண்டலத்தில் வெற்றிகளைப் பெற முடியாவிட்டாலும், பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாகவே உயர்ந்துள்ளது. குறிப்பாக, கோவை மாநகராட்சியில் 9 சதவீத வாக்கு வங்கி பெற்றது, திருப்பூர் மாநகராட்சியில் 2 மாமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பதுடன், ஒரு வார்டில் 2-ஆவது இடத்தையும் பிடித்தது.

ஈரோடு மாநகராட்சியில் வார்டுகளை கைப்பற்றாவிட்டாலும் 2011 உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜகவின் வாக்கு வங்கி உயர்திருப்பது, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் சுமார் 6 சதவீதம் வாக்குகளைப் பெற்றது உள்ளிட்டவற்றை வைத்துப் பார்க்கும்போது கொங்கு மண்டலத்தில் பாஜக ஆழமாக வேரூன்றி வளரத் தொடங்கியிருப்பதை உணரலாம்.
கொங்கு மண்டலத்தில் 2011 முதல் இதுவரை நடந்துள்ள சட்டப் பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களை முழுமையாக ஆய்வு செய்தால், தொடர்ந்து 2019-க்குப் பிறகு பாஜகவின் வாக்கு வங்கி சீராக உயர்ந்து வருகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகும் வகையில் பாஜக வேர் பிடிக்கத் தொடங்கியிருப்பது பல்வேறு அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.