கிணற்றில் விழுந்த சிறுத்தை 12 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு… தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை சத்தியமங்கலம் வனச்சரகம் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய  சிறுத்தை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை கடந்து சென்ற போது சாலையோரத்தில் புதர் மண்டி கிடந்த பகுதியில் நடமாடியுள்ளது.  அந்தப் பகுதி புதுக்குய்யனூர்  கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான  40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து மேலே ஏற முடியாமல் தவித்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்ட பொதுமக்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது சிறுத்தை படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவிக்கும் சிறுத்தையை மீட்பதற்காக கிணற்றுக்குள் ஏணியை இறக்கி வைத்தனர். சிறுத்தை ஏணியின் மூலம் மேலே ஏறி வனப்பகுதிக்குள் செல்லுமா என இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.  ஆனால் சிறுத்தை ஏணியில ஏறாமல் கிணற்றுக்குள் படுத்திருந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு கொண்டுவரப்பட்டு கூண்டிற்குள் ஒரு கோழியை வைத்து கிரேன் மூலம் கிணற்றுக்குள் கூண்டை இறக்கி வைத்துள்ளனர். கூண்டுக்குள் சிறுத்தை உள்ளே சென்றதும் மீண்டும் கூண்டை கிரேன் மூலம் மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிறுத்தையை விடுவிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மதியம் 2 மணி வரை வனத்துறையினர் காத்திருந்தும் கிணற்றுக்குள் இருந்த சிறுத்தை கூண்டிற்குள் செல்லாமல் போக்கு காட்டியது. இதன் காரணமாக வனத்துறையினர் சிறுத்தை கூண்டில் சேர்க்கும் வரை அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் (பொ) வெங்கடேஷ் பிரபு சிறுத்தை விழுந்து கிடக்கும் கிணற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு சிறுத்தையின் உடல் நலம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே சிறுத்தை கிணற்றுக்குள் இருக்கும் தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு கூட்டம் கூடியதால் சத்தியமங்கலம் போலீசார் பொதுமக்கள் கிணற்றுக்கு அருகில் செல்லாமல் இருக்கும் வகையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  நேற்று காலை 11 மணிக்கு கிணற்றில் இறக்கி வைக்கப்பட்ட கூண்டு குரங்கு பிடிப்பதற்கான சிறிய கூண்டு என்பதால் சிறுத்தை கூண்டிற்குள் நுழையாமல் போக்கு காட்டி வந்தது. மாலை 4 மணி அளவில் சிறுத்தையை பிடிப்பதற்கான பிரத்யேக கூண்டு கொண்டுவரப்பட்டு அதில் ஒரு வெள்ளாட்டை வைத்து மீண்டும் கிணற்றில் கூண்டு இறக்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கிணற்றில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதைத் தொடர்ந்து கிரேன்  மூலம் கிணற்றிலிருந்து சிறுத்தையுடன் கூண்டு மீட்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹடா வனப்பகுதியில்  விடுவிப்பதற்காக சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது. 12 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்…