எல்லன் மருத்துவமனையை அபகரிக்க முயன்ற விவகாரம்: கோவை வக்கீலுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.சி.ஐ.டி அதிரடி சோதனை..!!

கோவை காந்திபுரத்தில் எல்லன் ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. பிரபல டாக்டரான ராமச்சந்திரன் (வயது72) என்பவர் நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில், ஆஸ்பத்திரியை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர்(54) என்ற டாக்டருக்கு ஓப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்தார். மாத வாடகை 15 லட்சம் ரூபாய் என பேசப்பட்டது. ஆனால், 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை வாடகை பாக்கி ஏற்பட்டது.
இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கும் உமா சங்கருக்கும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ரூ. 100 கோடி மதிப்புடைய ஆஸ்பத்திரியை அபகரிக்க முயல்வதாக உமா சங்கர் மீது ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் உமாசங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஆஜராகிய கையெழுத்திட்டு வந்தார். இவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துட்டு திரும்பிய போது ரத்தினபுரி கண்ணப்ப நகர் பகுதியில் நடைபெற்ற கார் விபத்தில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்பத்திரி உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரன் உட்பட 13 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை மாநில தலைவரான வக்கீல் ராஜேந்திரனின் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளனர்.
இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சாய்பாபா காலனியில் நாராயண குரு ரோட்டில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான லாட்ஜ், அருகே அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
டி.எஸ்.பி சிவகுமார் தலைமையில் இன்று காலை முதல் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை ஒட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.