பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்-பாக்யராஜ் விமர்சனம்.!!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் பாக்யராஜ், பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருப்பதாகவும், தன் மீதான விமர்சனங்களை பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்து கொள்ளலாம் என்றும் இயக்குநர் பாக்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பிரதமர் மோடி குறித்து பேசினார். அதில், பிரதமர் மோடியை குறை சொல்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னு கேட்டா, ஆரம்பத்துல இருந்து சொல்லுவாங்க ஆ.. ஊன்னா பிரதமர் மோடி வெளிநாடு சென்று விடுகிறார் என்று எப்பபாரு இதையே பேசிட்டு இருக்காங்க.

எனக்கு அப்பலாம் தோணும் இவ்வளவு வெளிநாடு போற அளவுக்கு உடம்புல யாருக்கு சக்தி இருக்கு. எனக்கு தெரிஞ்சு நம்ம இங்கிருந்து வெளிநாடுக்கு 24 மணிநேரத்தில் இருந்து 48 மணிநேரம் பயணம் செஞ்சா, 3 நாள் ரெஸ்ட் தேவைப்படும். ஆனா, நம்ம பிரதமர் பொறுத்தவரைக்கும் எங்கையோ வெளிநாடுல இருப்பாரு. அடுத்தநாள் கோவைல ஏதாவது ஒரு விழானா வந்து நிப்பாரு. இவர் இவ்வளவு ஆக்டிவா இருக்குறத பார்த்தா எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு என்று பேசினார்.

தொடர்ந்து, உலகில் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அந்த நாட்டு பிரதமருடன் மோடி பேசும்போது, நான்கு பக்கத்தில் இருந்தும் விமர்சனங்கள் எழுகின்றன. இதையெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதே இல்லை. மோடியை விமர்சனங்கள் செய்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இப்படி சொல்றேன் என்றால் 3 மாதத்தில் பிறந்த குழந்தைக்குதான் வாய், காது இருக்காது. அதேபோல் தான் விமர்சனங்கள் செய்பவர்களுக்கு நல்லது சொன்னால் காது கேட்காது. அதைப்பற்றி பேசவும் மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.