அனைத்து வழக்கறிஞர்களுக்கும் மாதம் ரூ.5000 -சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு..!

சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர சான்றிதழ் பெற பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு, பதிவு செய்த 2 ஆண்டுக்குள் தேசிய அளவிலான வக்கீல்கள் குழு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அப்போதுதான் பார் கவுன்சிலின் நிரந்தர சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டு காலம் இளநிலை வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டும்.

கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், வழக்கறிஞராக பணியாற்ற குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகளாகும். இந்த காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர்.

சிலர், வேறு தொழிலுக்கு செல்கின்றனர். எனவே, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் புதுச்சேரி அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியது.

அதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 25 வக்கீல்களுக்கு மட்டுமே நிதி வழங்க விதி உருவாக்கப்பட்டது. இதனிடையே, அந்த விதியை மாற்றி, தகுதியுள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நிதி வழங்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, 25 பேருக்கு மட்டும் உதவித்தொகை என்ற வரையறையை புதுச்சேரி அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சட்டத்துறை மூலம் அனுப்பிய கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம், இனி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த இளம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.5000 மாத உதவித்தொகை கிடைக்கும்.