முதல்வரின் நல்ல அறிவிப்புகள் வரவேற்கக் கூடியது- ஓபிஎஸ் நன்றி.!!

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்” என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், ”தமிழக முதல்வர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருக்கு முழுஉருவ வெண்கலச்சிலை வைக்கப்படும் என்றும், அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இவைகளெல்லாம் நல்ல அறிவிப்புகளாக, வரவேற்கக்கூடிய அறிவிப்புகளாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி கூறுவதற்கு அதிமுக கடமைப்பட்டுள்ளது” என்றார்.