என்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர்…வாய்ப்புக்காக ஓடுபவன் நாய்க்கு சமமானவன்.. புதிய புயலை கிளப்பிய துரைமுருகன்..!

காஞ்சிபுரம்: தன்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர். என திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசி புதிய புயலை கிளப்பியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் நாய்க்கு சமமானவன் என்றும் எம்.ஜி.ஆரே அழைத்து அதிமுகவுக்கு செல்லாதவன் தாம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரை பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர்.புகழ் புராணம் பாடி சிலரை சூசகமாகவும் விமர்சித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்றிரவு 100 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான நெருக்கம் பற்றி பேசினார். தன்னை அதிமுகவுக்கு வருமாறு எம்.ஜி.ஆரே நேரில் அழைத்ததாகவும் ஆனால் ”என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக” என அவரிடம் நேருக்கு நேர் சொல்லிவிட்டு தாம் வந்துவிட்டதாகவும் கூறினார்.

தன்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர். என்று கூறிய துரைமுருகன், வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் எச்சில் இலைகளை சாப்பிடும் நாய்க்கு சமமானவன் என விமர்சித்தார். துரைமுருகனின் இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த திமுகவினரே அதிர்ந்து போனார்கள். யாரை மனதில் வைத்து துரைமுருகன் இப்படி பேசுகிறார், அவரது பேச்சின் பின்னணியில் என்ன காரணம் என குழம்பிப் போனார்கள். பெரியளவில் கைதட்டல் கூட துரைமுருகனுக்கு கிடைக்கவில்லை.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, முத்துசாமி, என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த பலரும் முக்கிய அமைச்சர்களாக வலம் வரும் சூழலில் அமைச்சர் துரைமுருகனின் இத்தகைய பேச்சு திமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகனை பற்றி துரைமுருகன் பேசுவார் என எதிர்பார்த்தால் புயலை கிளப்பும் வகையில் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார்.

இதனிடையே அமைச்சர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பது மட்டும் அவரது பேச்சின் மூலம் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசியது இங்கு பிரச்சனையல்ல, வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் எச்சில் இலைகளை சாப்பிடும் நாய்க்கு சமமானவன் என அவர் பேசியிருப்பது தான் விவாதத்தை எழுப்பியுள்ளது.