உ.பியில் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது ..!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதையொட்டி மிர்சாபூரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உக்ரைனில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வாரிசு அரசியல் மற்றும் மாஃபியாக்களை உத்தரபிரதேச வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார். மால்தாகியா சவுக் பகுதியில் இருந்து லங்கா சவுக் பகுதி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்தில் பேரணியாக சென்று ஆதரவு திரட்டினார்.

அதன்பின்னர் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, உடுக்கை அடித்து பக்தர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது சாலையோர தேனீர் கடையில் தொண்டர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தேனீர் அருந்தினார்.

இதேபோன்று வாரணாசி மாவட்டம் பிந்த்ராவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அவர்களை மீட்பதற்கு பதிலாக, மருத்துவ படிப்பிற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களே உக்ரைனுக்கு சென்றிருப்பதாக மத்திய அமைச்சர்கள் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா என்றும் வினவினார். முன்னதாக காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

வாரணாசியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வாகன பேரணி நடத்தினார். 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.