இணைய வழியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதி – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடங்கி வைத்தார்.!!

புதுடெல்லி: இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் கூறினார்.

நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இணைய வழியில் வழக்கு தொடரும் மேம்படுத்தப்பட்ட வசதியை (இ-ஃபைலிங் 2.0)அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து நீதிமன்ற அறையில் நேற்று விசாரணை தொடங்குவதற்கு முன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: இ-ஃபைலிங் 2.0 வசதியை தொடங்கியுள்ளோம். இந்த வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். இணைய வசதிகள்இல்லாத மற்றும் தொழில்நுட்பம்பற்றி அறியாத வழக்கறிஞர்களுக்கு உதவிட இரண்டு சேவைமையங்கள் தொடங்கப்பட்டுள் ளன. அனைத்து வழக்கறிஞர்களும் புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இ-சேவை மையங்கள் மூலம் ஒருவர் வழக்கு தொடர்வது மட்டுமின்றி பிற சேவைகளையும் பெறலாம். இ-ஃபைலிங் மென்பொருள் மூலம் நாட்டின் எந்தவொரு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கின் நிலையை அறியலாம். இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.