வருகிறது மோச்சா புயல்… தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு..? முக்கிய அப்டேட் இதோ.!!

சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ள நிலையில், இது சூப்பர் புயலாக மாறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

வங்கக்கடலில் உருவாக்கி இருக்கும் மோச்சா புயல் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக மாறி உள்ளது.

8 நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது கடந்த 1 வாரமாக வலிமை அடைந்து வருகிறது.

தீவிர புயலாக உருவான இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இந்த மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் உள்ளது.

இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காது. மியான்மரை தாக்க உள்ளது. மியான்மர் அருகே 175 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில்தான் மோச்சா புயல் குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், மோச்சா புயல் அதி தீவிர சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை மையம் கொடுக்கும் புள்ளிகளில் அடிப்படையில் பார்த்தால் இது சூப்பர் சூறாவளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் மியான்மர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

சூடான கடல், மற்றும் தளர்வான காற்று வெட்டு ஆகியவை இந்த புயல் தீவிரமடைவதற்கு தொடர்ந்து சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன., இந்த புயலுக்கு கண் பகுதி உருவாகி உள்ளது. அந்த கண் பகுதியில் வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம்.

அங்கே நிலவும் வெப்பநிலை காரணமாக இது சூப்பர் சூறாவளியாக மாறுமா என்பது இன்னும் 24- 36 மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

இந்த புயல் காரணமா தீபகற்ப இந்தியாவில் வானம் மேகங்கள் இன்றி தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை ஏற்படக்கூடும், மேலும் தமிழ்நாட்டிலும் வெப்பநிலை அதிகரிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் 40 முதல் 42°C வரை வெப்பநிலை உச்சமாக இருக்கும், என்று சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக chennairains பக்கத்தில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதில், கடந்த வருடங்களில் இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதி பல மோசமான புயல்களை சந்தித்து இருக்கிறது. 1970 போலா புயல் பங்களாதேஷைத் தாக்கியது. வங்காளதேசத்தை ஒரு சுதந்திர நாடாக உருவாக்குவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்த புயலும் இருந்தது, 1991 வங்காளதேச புயல் கிட்டத்தட்ட 1.5 லட்சம் மக்களைக் கொன்றது.

1999ல் ஒடிசா சூப்பர் சூறாவளி புவனேஸ்வர் அருகே கடற்கரையைத் தாக்கியதில் 10000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது.

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நர்கிஸ் புயல் மியான்மரின் தென்மேற்கு கடற்கரையில் மே 2 ஆம் தேதி 200 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த பின் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வீடற்றவர்களாக மாறினார்கள். அந்த அளவிற்கு பெரிய சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தற்போது தெற்கு வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என IMD தெரிவித்து உள்ளது. மியான்மர் கடற்கரையை கடந்த நர்கிஸ் புயலை இந்த சமயத்தில் நினைவு கூற வேண்டி உள்ளது. தற்போது உருவாகும் தாழ்வு பகுதியின் இடம் நர்கிஸ் புயலின் இடத்துடன் ஒத்துப்போகிறது என்று சொல்ல முடியாது.

ஆனால் தற்போது உள்ள தாழ்வு பகுதி உருவான விதம், அது வலிமை அடையும் விதம், அது தற்போது வடகிழக்கு பகுதியில் நகர்ந்து வங்கம் – மியான்மர் நோக்கி வருவதை பார்க்க அப்படியே நர்கிஸ் புயலை போலவே உள்ளது. இரண்டிற்கும் இன்னொரு ஒற்றுமையும் உள்ளது.

நர்கிஸ் புயல் முதல் 24 மணி நேரம் ஸ்டேஜ் 1 வலிமை குறைந்த புயலாக இருந்து பின்னர் ஸ்டேஜ் 4 வலிமை மிக்க புயலாக மாறியது. இதற்கு வங்க கடலில் கடல் மேல் நிலவிய வெப்பநிலை முக்கிய காரணம். அதேபோல் கடலின் மேற்பரப்பு நீர் எதிர்பார்த்ததை விட அதிக ஆழத்திற்கு பரவி இருந்தது. அதாவது வெப்பமான நீர் பரப்பு அதிக ஆழம் வரை இருந்தது. இதனால் நர்கிஸ் புயலின் வலிமை 300 சதவிகிதம் அதிகரித்தது.

ரீட்டா, கத்ரினா புயல்கள் வலிமை அடையவும் இதுவே காரணமாக இருந்தது. தற்போது உருவாகும் தாழ்வு மண்டல பகுதி இருக்கும் இடத்திலும் இதேபோல்தான் வெப்பநிலை மிக அதிகமாக கடலுக்கு மேலே காணப்படுகிறது.

வங்காள விரிகுடாவில் குறிப்பாக மத்திய விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் மியான்மர் கடற்கரையின் மேற்கில், வெப்பநிலை அதிகம் உள்ளது. இங்கே கிட்டத்தட்ட 32 ° C உள்ளது. இயல்பை விட கூடுதல் 3 ° C வெப்பநிலை உள்ளது.

இது மே 2008 இல் தாக்கிய நர்கிஸ் புயலை போல அப்படியே இருக்கிறது என்று சொல்ல முடியாது. அப்போது இருந்ததை விட வெப்பம் அதிகமாக இப்போது உள்ளது. இதனால் இந்த புயல் மேலும் வலிமை அடைவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன. கூடுதல் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து புயலின் வலிமை மேலும் அதிகரிக்கும், என்று கூறி உள்ளனர்.