கோழிகமுத்தி முகாமில் யானைகள் சிறப்பாக பராமரித்த மலசர் இனத்தவரை பாராட்டி கஜ் கவ்ரவ் விருது..!!

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனசரகங்கள் உள்ளன. இதில் உலாந்தி வனசரகத்தில் உள்ள கோழிகமுத்தியில் வனத்துறையின் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் உள்ளனர். இந்த முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சி அளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணியை பாராட்டி மத்திய வனத்துறை அமைச்சகம் கஜ் கவ்ரவ் விருதை அறிவித்துள்ளது.இதுகுறித்து வனத்து றையினர் கூறியதாவது:-
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மலசர் இனத்தவரால் பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் தமிழகத்தின் யானை-மனித மோதல் ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சமவெளியில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைகள் பிடிக்கப்பட்டு, கோழிகமுத்தி முகாமில் சிறப்பாக பழக்கப்படுத்தப்பட்ட பின்னர் கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் ஒன்று தான் சின்னத்தம்பி யானை. இதில் மலசர் இனத்தவர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தியாவிலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள மாவூத்கள் மற்றும் காவடிகள் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக யானைகளை பராமரிக்கும் பணியில் உள்ள மலசர் இன மக்களுக்கு கஜ் கவ்ரவ் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது மலசர் இன மக்களில் சிறந்த முறையில் யானையை பராமரித்து வரும் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினத்தன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவில் வைத்து வழங்க உள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே ஆனைமலை புலிகள் காப்பகம் இந்த விருதை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.