சூடு பிடித்தது தேர்தல் களம்… தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!!

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.

ஆன்லைன் மூலமாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, உண்மை நகல்களை நேரிலும் அளிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியின் வாக்காளராகவும் இருந்தால், ஒருவர் மட்டும் முன்மொழிந்தாள் போதும். வேறு ஒரு தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்று பெற்று வரவேண்டும். வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு. மனுத்தாக்கலின் போது வேட்பாளர் மற்றும் 4 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதி அளிக்கப்படும். ஒரு வேட்பாளர் கடந்த தேர்தலில் ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

அந்த தொகையானது தற்போது ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்ய தவறினால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு மனுக்களை தாக்கல் செய்யலாம். இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்புமனுவோடு பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.25,000; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.12,500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களுக்கான காவல்துறை பாதுகாப்புக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.