திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுகளுக்கு காங்கிரஸ் மற்றும் தவெகவினர் எதிர்வினையாற்றியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி, ‘ராகுல் காந்தி பற்றி பேச அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எந்த தகுதியும் இல்லை.அவர் தனது கொச்சைத்தனமான பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இனிமேலும் எல்லை மீறி பேசினால், அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் எந்த பகுதிக்கு வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி அவர் மீது கருப்பு மை வீசி போராட்டம் நடத்துவோம்’ எனத் தெரிவித்தார்.
இதேபோல், முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் குறித்து பொதுமேடையில் அவதூறாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக வழக்கறிஞர் அணியினர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.திமுக மற்றும் காங்கிரஸ், தவெக இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை போர் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







