இஸ்லாமிய வாக்குகளின் பிளவு தான்… பாதளத்திலிருந்து படுபாதாளத்திற்கு காங்கிரஸ் செல்ல காரணமாம்..!

டெல்லி : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி வாகை சூடி இருக்கும் நிலையில் பாஜகவும் ஓரளவு இடங்களை பெற்றிருக்கிறது.

ஆனால் தலைநகரில் தேசிய கட்சியான காங்கிரஸின் நிலைமை பாதாளத்திலிருந்து படுபாதாளத்திற்கு சரிந்துள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான வாக்கு சதவீதமே பதிவானது. மொத்தம் உள்ள 250 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 709 பெண்கள் உட்பட 1349 வேட்பாளர்கள் களமிறங்கினர்

ம்த்தியில் ஆளும் பாஜகவும், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் மாநகராட்சியை கைப்பற்ற பல பரிட்சை நடத்தின. 250 வார்டுகளிலும் இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து தேர்தளில் களம் கண்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுமார் 150 முதல் 170 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது அதே நேரத்தில் 250 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக 69 முதல் 91 வார்டுகளை கைப்பற்றி பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. எதிர்பார்த்தது போலவே ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

2007 முதல் தொடர்ந்து நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவே டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி இருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மி பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டு ஏற்பட்டிருந்தது. நான்காம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதலில் பின்தங்கினாலும் பின்னர் பலத்த போட்டியளித்து பல வார்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றியது.

134 வார்டுகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடமிருந்து இந்தியாவின் தலைநகரையே கைப்பற்றி இருக்கிறது. அதே நேரத்தில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சிக்கு தலைக்காத வகையில் கடும் போட்டி அளித்தது பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் போட்டியிலிருந்து கிட்டத்தட்ட காங்கிரஸ் விலகி விட்டது என்றே கூறலாம். காரணம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 247 இடங்களில் போட்டியிட்ட நிலையில் வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே பெற்றது அந்த கட்சியினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. சுயேட்சை வேட்பாளர்கள் கூட மூன்று இடங்களில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கட்சி வசம் வந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் காங்கிரஸ் தலைவர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட பிரச்சாரமும், முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் தலைமையில் தொடுக்கப்பட்ட வியூகங்களும் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கவில்லை. கடந்த 2017 தேர்தலில் 21.9% ஆக இருந்த வாக்குகள் தற்போது 11.68% சதவீதமாக அதள பாதாளத்திற்கு சரிந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் தலைநகர் டெல்லியில் ஒற்றை இலக்கத்திலேயே வார்டுகளை வென்றிருப்பது மிக மோசமான செயல்பாடாக பார்க்கப்படுகிறது. தோல்விக்கு அரசியல் செல்வாக்கு மிகுந்த வாரிசு வேட்பாளர்களை நிறுத்தியது, முஸ்லிம் வாக்குகளில் ஏற்பட்ட பிளவு ஆகியவை ஆம் ஆத்மிக்கு உதவியோடு காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கவில்லை. அதே நேரத்தில் 2020 சட்டமன்றத் தேர்தலில் 4.26 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 11 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. சௌஹான் பாங்கர், ஜாகிர் நகர், அபு ஃபசல் என்கிளேவ், கபீர் நகர், ஆயா நகர், நிஹால் விஹார், சாஸ்திரி பார்க், பிரிஜ் பூரி மற்றும் முஸ்தபாபாத் ஆகிய பகுதிகளில் அதிகளவு முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒன்பது வார்டுகளில் ஏழு வார்டுகளில் கணிசமான முஸ்லிம் மக்கள் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் வடகிழக்கு டெல்லியை தாக்கிய வகுப்புவாத கலவரங்கள் போன்ற விவகாரங்களில் அமைதி மற்றும் அமைதியான இந்துத்துவ அரசியல் காரணமாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மீது இஸ்லாமிய சமூகத்தின் அதிருப்தியால் முஸ்லிம் வாக்குகளில் பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே இந்த தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் 2013 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த பிறகு, மீண்டும் இத்தேர்தலில் டெல்லியை மீட்டெடுக்க போராடியது. ஆனால் அந்த முயற்சியும் தற்போது வீணாகி விட்டது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.