சார்ஜாவில் இருந்து கோவை வந்த பெண் விமானிக்கு கொரோனா உறுதி..!

கோவை: சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர்களில் சேலத்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதியானது.
இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கடந்த 7-ந் தேதி கோவை வந்த விமான பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரேண்டம் முறையில் எடுக்கப்பட்ட சளி மாதிரியில் பீளமேட்டை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் எந்த வகை கொரோனா என்பது தெரிய வரும். அந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.