கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டாலும் தொடர்ந்து கண்காணிக்கும் காவல்துறை ..!

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது.

காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 காவலர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின்னர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.

கோவை மாநகர காவல்துறையில் ஏற்கனவே ஒரு ட்ரோன் கேமரா உள்ள நிலையில் அதில் புதுப்பிக்க வேண்டிய அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் ஆகியவை குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் புலனாய்வு செய்த அனைத்து கோப்புகளும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் மாநகர காவல் துறை அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.