முதல்வர் வரும் 28, 29ம் தேதி தூத்துக்குடி, தென்காசி பயணம்..!

நெல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்த நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதால் முதல்வரின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 28, 29ம் தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து வருகிற 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மாலை 6 மணிக்கு கோவில்பட்டி வருகிறார். கோவில்பட்டி – இளையரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கோவில்பட்டி மேற்கு நகர திமுக அலுவலகத்தையும், அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்றிரவு குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குகிறார்.

மறுநாள் அக்.29ம் தேதி காலை 10 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் இ.விலக்கு பகுதியில் உள்ள மைதானத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு மதுரை செல்லும் முதல்வர் அங்கு ஓய்வெடுக்கிறார். மறுநாள் (30ம் தேதி) தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் மதுரை வரும் முதல்வர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.