ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த அரசியல் சாசன அமர்வு, விசாரணை நவம்பர் 23ம் (இன்று) தேதிக்கு ஒத்திவைத்ததோடு, எழுத்துப்பூர்வ வாதங்களை நவம்பர் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, இவ்வழக்கில் மதுரை தொகுதியின் எம்பி என்ற வகையில் தன்னையும் சேர்க்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்பி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்தரநாத் எம்பி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களை இவ்வழக்கில் சேர்க்கக் கோரி இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply