2 வயது பெண் குழந்தை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்த கொடூர தாய் கைது..!

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக் (வயது 34) கூலித் தொழிலாளி, அவரது மனைவி தில் சாத் பானு (வயது 33) இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் 7 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர். சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் முகமது ரபிக்- தில்சாத் பானு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இதே போல கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தில்சாத் பானு தனது 2பெண் குழந்தைகளையும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. உடலில் இருந்த காயத்தால் 2 வயது பெண் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது விளையாடிய போது குழந்தை கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் தில்சாத் பானு அடித்ததில் தான் குழந்தை காயமடைந்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 வயது பெண் குழந்தை நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தது. இதை யடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் தில்சாத் பானுவை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .பெற்ற தாயை தனது குழந்தை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.