ஆச்சரியப்பட வைத்த தொழில் நுட்பம் கொண்ட 1.4 கி.மீ நீளத் தொங்கும் பாலம்… விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது .!

ராஜஸ்தான் மாநிலத்தில் 1.4 கி.மீ நீளத்திற்குத் தொங்கும் பாலம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. இந்த பாலம் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் முக்கியமான போக்குவரத்து என்றால் சாலை போக்குவரத்து தான். சாலை போக்குவரத்திற்கு முக்கியமானது கட்டமைப்புகள் தான் தரமான சாலை இருந்தால் சுகமான பயணம் அமையும். விபத்தில்லாத பயணத்திற்கும் தரமான சாலைகள் வேண்டும். சாலைகள் மட்டுமல்ல பாலங்கள், மேம்பாலங்கள் எல்லாம் இருந்தால் தான் எந்த விதமான இடையூறும் இல்லாமல் பயணிக்க முடியும்.

இப்படியாக நதி, கடல், நீர்நிலைகள் எனப் பல விஷயங்களைக் கடந்து செல்வதற்காக நாட்டில் ஆங்காங்கே பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படியாகப் பாலங்கள் அமைக்கப்படும்போது அது இயற்கையைப் பாதிக்காத வண்ணமும், இயற்கை சீற்றங்களால் சேதமடையாத வண்ணமும் கட்டமைக்கப்பட வேண்டும். அப்படி வடிவமைக்கப்பட்டால் தான் அந்த பாலம் உறுதியாகவும், நிலையாகவும், நிற்கும். இதற்காக பலதொழிற்நுட்ப முன்னேற்றங்கள் நாட்டில் வந்துவிட்டன.

இப்படியாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 76 அந்த மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழியில் சாம்பல் நதி ஓடுகிறது. இந்த நதியை இந்த சாலை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த பகுதியில் பாலம் கட்ட திட்டமிட்டனர். ஆனால் நதியின் குறுக்கே பாலம் அமைத்தால் அது நதிக்கு மாசு ஏற்படுத்தும் மேலும் இயற்கை சீற்றங்களின் போது பிரச்சனை ஏற்படும் சூழல் இருந்தது.

இதையடுத்து இந்த பகுதியில் பாலத்தைத் தொங்கும் பாலமாக அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ214 கோடி பட்ஜெட்டில் சுமார் 1.4 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் நதியின் குறுக்கே எந்த விதமான தூண்களும் இல்லாமல் தொங்கு பாலமாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்றின் இரு பக்கமும் உயரமான தூண்களை அமைத்து அதில் கம்பிகளைக் கட்டி பாலத்தை அதனுடன் இணைத்துள்ளனர்.

அந்த பாலத்தின் எடை முழுவதையும் அந்த கம்பிகள் தான் தாங்கவுள்ளது. இந்த கட்டுமானத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் இருக்கும் இன்ஜினியரிங் தொழிற்நுட்பம் தான். இந்த தொழிற்நுட்பம் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் கூட சேதமடையாத படி கட்டமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் எவ்வளவு வாகனங்கள் சென்றாலும் அதன் எடையைத் தாங்கும் அளவிற்கு இதன் கம்பிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் வடிவமைப்பில் ஏரோ டைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏரோ டைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் எவ்வளவு புயல் வந்தாலும் அசையாமல் நிலையாக இருக்கும். மேலும் இந்த பாலத்தில் பூகம்பத்தைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பாலம் இருக்கும் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் அதை அந்த கருவி சரியாகக் கணக்கிடும். இந்த பாலத்தைக் கட்டமைக்கப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த பாலம் தற்போது கட்டுமானங்கள் முடிந்து பயன்படுத்தத் தயார் நிலைக்கு வந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 1.4 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலத்தில் 700 மீட்டர் வரை தொங்கும் பாலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் சத்தத்தைக் குறைக்க 7.5மீ நாய்ஸ் பேரியர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தைக் கட்டி முடிக்க மொத்தம் ரூ214 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதே போலத் தொங்கும் பாலம் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நீளமான தொங்கும் பாலம் இது தான். இந்த பாலம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்வரவுள்ளது.