முதல்வருக்கு நன்றி… தமிழில் கடிதம் எழுதிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷி.!!

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி உணவு பொருட்கள் வரை அனைத்தின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்கி தமிழக அரசு உதவ, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை முன்மொழிந்த சிறப்பு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார். அதற்கு இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்ஷி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது

“தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு, தமிழ் நாட்டில் இருந்து உணவு, அத்தியாவியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது. இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும், தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”. என தெரிவித்துள்ளார்.