கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தரக்கோரி தஞ்சை விவசாயிகள் தரையில் படுத்து சாலை மறியல்..!

டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செல்லம்பட்டியில் பேருந்துகளை மறித்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காத ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக செய்துள்ளனர் விவசாயிகள். இந்த நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காத காரணத்தால். மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து. இதன் காரணமாக நடவு செய்த குறுவை நெல் பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. கருகி வரும் குறுவை நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், தஞ்சை மாவட்டம் செல்லம்பட்டி கல்லனை கால்வாய் கரையில் பேருந்துகளை வழி மறித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தரையில் படுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஒரத்தநாடு வட்டாட்சியர் சுந்தர செல்வி விவசாயிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்தனர்..