தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்திலேயே திருச்சிக்கு முதல் பரிசு…

தமிழகத்தில் உள்ள நகரங்களில் திருச்சிக்கு இந்த ஆண்டுமுதலிடம் கிடைத்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்வச் சா்வக்சன் விருதுக்காக ஆண்டுதோறும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில், திருச்சிக்கு தேசிய அளவில் 112-ஆவது இடம் கிடைத்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள நகரங்களுடன் ஒப்பிடுகையில் முதலாவது இடம் கிடைத்துள்ளது. கோவைக்கு 2-ஆவது இடமும், தூத்துக்குடிக்கு 3-ஆவது இடமும் வந்துள்ளது. சென்னைக்கு 5-ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலும், கடந்தாண்டு வெளியான தூய்மை நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 262-ஆவது இடம் கிடைத்திருந்தது. தற்போது, 112-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. வீடு, வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து சேகரிக்கும் பணிக்கு 100 சதவீதம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. குப்பைகளைப் பிரித்தல் பணிக்கு 89 சதம், குப்பைகளைக் கையாளுதல், பராமரித்தலுக்கு 76 சதம், குப்பைக் கிடங்குகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிக்கு 100 சதம், குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைக்கு 100 சதம், பொதுக் கழிப்பறைகளின் தூய்மை, சந்தைப் பகுதிகளின் தூய்மை, நீா்நிலைகள் மற்றும் இதர கட்டுமானங்களில் தூய்மை ஆகியவற்றுக்கு தலா 100 சதம் மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், திருச்சி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதையும், சான்றிதழையும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகத்தின் செயலா் மனோஜ் ஜோஷி வழங்கிட மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் இரா. வைத்திநாதன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இதுதொடா்பாக, அவா்கள் கூறுகையில் திடக்கழிவு மேலாண்மையில் திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி குப்பைகளை பிரித்து வழங்குவதை வீடுகளில் இருந்து இயக்கமாகவே மாற்றியுள்ளோம். மேலும், மத்திய அரசு நிா்ணயித்துள்ள இதர காரணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்திப் பணியாற்றி வருகிறோம். இருப்பினும், 112 -ஆவது இடம் கிடைத்துள்ளது. எங்களுடன் போட்டியிடும் நகரங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப திட்டமிட்டு பணியாற்ற வேண்டியுள்ளது. வருங்காலங்களில் முதலிடத்தை நோக்கி முன்னேறுவோம். தமிழக அளவில் திருச்சி முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரியது என்றனா்.