லட்சத்தீவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிப்பு!: இந்தியாவுக்கு இஸ்ரேல் முதல் ஆதரவு…

டெல்லி: மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. லட்சத்தீவுகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் இஸ்ரேல் முன்வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றது முதலே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக்கி வருகிறார். மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்றினார் முய்சு. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கை கோர்த்து நிற்கிறது மாலத்தீவு. முய்சுக்கு முன்னர் மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சோலி பதவி வகித்தார். அவர் இந்தியாவை முழுமையாக ஆதரித்தவர். இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படுத்தியவர் முகமது சோலி. ஆனால் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்த அதிபர் முய்சுக்கு அதிபர் தேர்தலில் வெற்றியை கொடுத்தனர் மாலத்தீவு மக்கள். இத்தனைக்கும் மாலத்தீவுக்கு குடிநீர் பிரச்சனை முதல் பாதுகாப்பு வரை இந்தியாதான் அரணாக இருந்து வந்தது.

இந்த பின்னணியில் பிரதமர் மோடியின் லட்சத்தீவுகள் பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவுக்கான மாலத்தீவு தூதரை நேரில் அழைத்தும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. மாலத்தீவு நாட்டில் இந்தியாவுக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருகின்றன. மாலத்தீவு அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தற்போது மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த முதல் வெளிநாடு இஸ்ரே. டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை லட்சத்தீவில் செயல்படுத்த இஸ்ரேல் தயாராக இருக்கிறது எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் லட்சத்தீவின் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் லட்சத்தீவுகள் படங்களை பகிர்ந்தும் இருக்கிறார் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்.

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை பிரதமர் மோடி அங்கு பார்வையிட்டார். அதனடிப்படையில் தற்போது லட்சத்தீவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.