தீவிரவாதிகளை நல்லவர்கள் கெட்டவர்கள் என வகைப்படுத்த கூடாது – ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்.!

நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன.

தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா, வரும் 14, 15-ம் தேதிகளில் 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளது.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்க உள்ளார். குறிப்பாக, 15-ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ருச்சிரா கம்போஜ், ஐ.நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2001-ம் ஆண்டு செப். 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த வர்த்தக மைய கட்டிடத்தை தீவிரவாதிகள் தகர்த்தனர். அதன் பிறகு லண்டன், மும்பை, பாரிஸ் மற்றும் மேற்கு ஆசியாவின் பல பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவுபவர்கள், நிதியுதவி செய் பவர்கள் என அனைவரும் சர்வ தேச அளவில் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். ஐ.நா. உறுப்புநாடுகள் இணைந்து செயல்பட்டால்தான், சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தலை தோற்கடிக்க முடியும்.

தீவிரவாதத்தை எந்த ஒரு குறிப்பிட்ட இனம், மதம் மற்றும் நாட்டுடனும் தொடர்புபடுத்த முடியாது. தீவிரவாதம் எந்த ஒரு வடிவில் இருந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக தீவிரவாதிகளை நல்லவர்கள், கெட்டவர்கள் என வகைப்படுத்துவதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஏனெனில், இத்தகைய நடவடிக்கைகள் தீவிரவாதத்துக்கு எதிரான போரை நீர்த்து போகச் செய்துவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.