மணிப்பூரில் தொடர் வன்முறையால் பெரும் பதற்றம்… 7 பேர் சுட்டுக்கொலை..

ம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடந்து வன்முறை நடந்து வரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் வசிக்கும் மோரே பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அங்கு வசிக்கும் குக்கி மற்றும் மைத்தேயி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை தான் வன்முறையாக வெடித்தது.

இதையடுத்து ஒட்டுமொத்த மணிப்பூரும் முடங்கியது. கார்கள், வீடுகள், டயர்கள் எரிப்பு என தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் வன்முறை என்பது குறைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஆயுதமேந்திய நபர்களுக்கும், போலீசார் மற்றும் ராணுவத்துக்கும் இடையே மோதல் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தெங்னவ்பால் மாவட்டத்தில் உள்ள மோரா நகரில் நேற்று 2 காவலர்கள் உள்பட 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இம்பாலில் இருந்து சுமார் 42 கிமீ தொலைவில் உள்ள நிங்தௌகாங் கா-குனோவில் நேற்று 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தியாம் சோமென் சிங் (50), நிங்தௌஜம் நபாடிப் மெய்தேய் (38), ஒய்னம் பமோல்ஜாவ் சிங் (63) மற்றும் அவரது மகன் ஒய்னம் மனிதோம்பா சிங் (32) ஆகியோர் பலியாகி உள்ளனர். இவர்களை கொன்றது யார்? என்பது தெரியவில்லை.

இருப்பினும் மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக நடந்த சண்டையில் இவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே தான் வன்முறை பாதித்த பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மோரே உள்பட பல இடங்களில் இந்த போராட்டம் நடக்கிறது.

மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) முன்னாள் தலைமை இயக்குநர் குல்தீப் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போலீஸ் துறையை முதல்வர் பீரன் சிங் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனக்கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தால் அந்த பகுதிகளுக்கு தரைவழியாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மணிப்பூர் மாநில முதல்வர் பீரன் சிங் சார்பில் மத்திய அரசிடம் ஹெலிகாப்டர் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஹெலிகாப்டர்கள் தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.