குவாரிக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்களின் செல்போன்கள் திருடிய வாலிபர்கள் 3 பேரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.

இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர். மறுநாள் அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக எழுந்தனர். அப்போது அறையில் இருந்த அவர்களது 3 செல்போன்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேடி பார்த்து கிடைக்காததால் அவர்கள் சென்று செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.

அவர் குவாரியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் குவாரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது. உடனே செந்தில்குமார் அவர்களை அழைத்து கொண்டு விரைந்தார். அப்போது அங்கு சென்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபர்களை செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த மாரிஸ்வரன் (19), ஈச்சனாரியை சேர்ந்த குனசேகரன் (19), செட்டிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (19) என்பதும், நண்பர்களான அவர்கள் செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.