கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார்

கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார்

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது அது கள்ள நோட்டு என்று தெரியவந்தது. உடனே அவர் மற்ற ஊழியர்கள் துணையுடன் வாலிபரை மடக்கி பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கோவைபுதூர் அறிவாளி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. இந்த கள்ள நோட்டுகளை கீழே கிடந்ததை எடுத்து வந்ததாக காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார். 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. ரமேஷ் இடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 56 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரமேஷ் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரமேஷ் பொய்யான தகவலை கூறுவதாகவும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து ரமேஷுக்கு இந்த நோட்டுகளை கொடுத்தவர் யார் ? என்ற தகவல் சேகரிக்கப்படும் என்றும், இதில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ அதிகாரிகள் தெரிவித்தனர்.